கேஜிஎஃப் 1, 2 தொடர் வெற்றிகளை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் கொடுத்த பிரம்மாண்டம்.
“பாகுபலி” க்குப்பின் பிரபாசுக்கு மீண்டும் அடையாளம் காட்டும் படம். சிறுவயது நட்பின் கையை பிடித்துக்கொண்டு, சண்டைக்கு கிளம்பும் முதல் காட்சியில் இருந்து படம் முடியும் கடைசி நொடி வரை கச்சிதமாக பிராபாசுக்கு பாத்திர வடிவமைப்பு செய்தது முதல் வெற்றி.
தனக்கென ஒரு கதை, பாத்திரங்கள், இருக்கையை இறுகப்பிடித்து அமர வைக்கும் திரைக்கதை, புழுதி பறக்கும் கதைக்களம், வண்ண வடிவம், நரம்பை பொடியாக்க வைக்கும் பின்னணி இசைக்கோர்வை, இரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சி அமைப்புகள் என தனி அரசாங்கமே திரையுலகில் நடத்துகிறார் பிரசாந்த் நீல்.
இதில் வரும் பாத்திரங்கள் மீண்டும் இரண்டாம் பாகம் “சௌர்ய பருவம்” இல் கண்டிப்பாக நினைவுக்கு வரும்படி கதை சொல்லி இருக்கிறார். இளைய தலைமுறையினருக்கு சரியான விருந்து.
பிரபாசை மீண்டும் இந்தியாவின் அசைக்க முடியாத பெரிய நட்சத்திரமாக உலக திரையில் முன்னிறுத்திக்காட்டியுள்ளார். அவரது ஆக்ரோஷத்துக்கு “அன்பறிவ்” இரண்டு கையிலும் வாளைக்கொடுத்து ரத்தாபிஷேகம் செய்து விட்டு இருக்கிறார். விட்ட இடத்தில் இருந்து “ரவி பஸ்ரூர்” பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார்.
ஒளிப்பதிவாளர் புவன் கௌடாவும் அப்படியே. கொஞ்சம் கூட கருணை இல்லாமல் திரியும் ராக்ஷஸ கூட்டம், பதவி போதை, அதிகார சபை, அரசாங்க கொலைகள் என பஞ்சமில்லாமல் பகைக்களம் படைத்து அதில் பிரபாசை முழு வெறியுடன் உலவ விட்டு கடைசியில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் நீல்.
சண்டைக்காட்சிகள் அனைத்தும் படத்தின் உயிர் நாடிகள். பிரபாஸ் அனாயாசமாக ஜொலிக்கிறார். அன்பறிவுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது நிச்சயம்.
ஆருயிர் நண்பன் “பிரித்விராஜு” நட்புக்காக பிரபாஸ் நடத்தும் அனைத்தும் பெரும் ஆரவாரத்தை அளிக்கிறது. திரை அரங்கம் அதிர்கிறது. காளி அவதார வேடக்காட்சி கரகோஷம், கத்தும் ஒளிகளில் அரங்கில் காதை பிளக்கிறது.
உணர்ச்சிபூர்வமான வசனங்களையும், முக பாவங்களையும் படம் முழுக்க தெளித்து விட்டு கட்டிப்போட்டு வைக்கிறார்.
அன்னையின் பாசம், நண்பனின் உதவி, எதையும் எதிர்கொள்ளும் மிருகத்தனமான பலம் என தனது நாயகனை தெளிவாக முன் நிறுத்தி பல எல்லை வரைவுகளை தகர்த்து எறிந்து இந்திய திரைப்படத்தை உலக அரங்கிற்கு “சலார்” மூலம் சவால் விட்டு இருக்கும் இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சலார் திரைப்படைப்பின் புதிய பரிமாணம்.
– கிருஷ்ணன் இரவிஷங்கர்