இந்தி – திரைப்பட விமர்சனம் 5 வருட இடைவெளிக்குப்பின் திரைக்கதை மாயாவி ராஜ்குமார் ஹிராணி தொகுத்து, இயக்கிய படம். 3 வருட இடைவெளிக்குப்பின் நடிக்க வந்து இந்த ஆண்டின் 3 வது படத்தை கொடுக்கும் “பாலிவுட்” “கிங்” கான் படம். பதான், ஜவான் போன்ற இரண்டு அதிரடி 1000 கோடி வசூல்படங்களுக்குப்பின் நேர் எதிரான கதையம்சமுள்ள படம். ராஜ்குமார் ஹிராணி படங்கள் பெரும்பாலும் மனித வளம், மேலாண்மை காட்சிகள் நிறைந்து இருக்கும்.
ஒரு நல்ல கருத்தை பயமின்றி சொல்லி இருப்பார். இதிலும் அப்படித்தான். நகைச்சுவை காட்சிகள் ஏகத்துக்கு களை கட்டுகிறது. ஒரே கண்ணில் சிரிப்பில் நீர் வர விட்டு, சில நிமிட இடைவெளியில் அதே கண்ணில் அழவைத்து நீர் வடிய விட்டுஇருப்பார்.
அது தான் அவரது பலம். தன் மண், மக்கள், இனம், எல்லை, மொழி என வகை வகையாக பிரித்து எதற்கு ஏங்குவது, எதற்கு அழுவது என நெஞ்சை பிளந்து விடுகிறார். அடுத்த நொடி இயல்பு நிலைக்கு இட்டுச் செல்கிறது திரைக்கதை. “கௌரவ வேடத்தில்” வரும் விக்கி கௌஸல் மனத்தை அள்ளுகிறார்.
அஜய் தேவ்கன், மனோஜ் பாஜ்பாய், நவாசுதின் சித்திக்கி வரிசையில் இயல்பான நடிப்பில் வளர்ந்து வரும் இவர் இதிலும் அசத்தி உள்ளார். “டாப்ஸி”க்கு இது அவரது திரைப்பயணத்தின் தலை சிறந்த படம். இறுதியில், ஷாருக்கானிடம் கண்ணில் நீர் வழிய சிரித்துக்கொண்டே” ஒரு டேப் ரெக்கார்டரை திருப்பி குடுக்கதானே இங்க வந்தே….எனக்காக இத்தன வருஷம் இங்கேயே தங்கிட்டியா?” என அரங்கத்தையே அழ வைக்கிறார்.
பழைய “வீர் சாரா” படத்தில் வந்த “பிரீத்தி ஜின்டாவின்” கதா பாத்திரத்தை நினைவூட்டுகிறது என்றாலும் கண்ணீருக்கு பஞ்சமில்லை. இனி அவ்வளவுதான்…இனி அவரால் என்ன செய்ய முடியும்? என்ற விமர்சனத்தை சவாலாகவே எடுத்து ஒவ்வொரு முறையும் ஆழமாக தன்னை புதுப்பித்து கொண்டு அதகளப்படுத்தும் “ஷாருக் கானு”க்கு இந்த கதை அல்வா சாப்பிடுவது போல் அசால்ட்டாக நடித்துள்ளார். அர்ஜித்சிங்கின் “ஓ மாஹி…” பாடல் பூஞ்சிறகு போல மனதை வருடுகிறது.
எத்தனையோ படங்கள் கடந்த ஐந்து வருடங்களில் வந்து போனாலும் “உள்ளேன் அய்யா” என்று கை தூக்கி ராஜ்குமார் ஹிராணி இந்தப்படம் மூலம் பதிவிட்டு, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சிறந்த படம். Dunki, இந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் வந்த திரை வரம்.
– கிருஷ்ணன் இரவிஷங்கர்