ஆன்லைன் ஷாப்பிங் வந்ததுக்கப்புறம் தேவை இருக்கோ, இல்லையோ பார்த்தவுடனே புடிச்ச பொருளையோ, இல்ல டிஸ்கவுண்ட்ல கிடைக்குதுங்கிறதுக்காக கண்ணுல பட்ட எல்லாப்பொருளையும் வாங்கி (டிஸ்கவரி Bear Grylls சாப்பிடறது மாதிரி) குவிக்கிறதே நம்ம வாடிக்கையாப் போச்சு (அதுனாலதான் வாடிக்கையாளர்ன்னு  சொல்றாங்க).  

  நாலு பேர் இருக்கிற குடும்பத்துக்கு ஒரு மீடியம் சைஸ் குக்கர் வீட்ல இருந்தாளுங்கூட, விருந்தாளிங்க வந்தா என்ன பண்றதுன்னு அடம்(தம்)புடிச்சுப் பேசி பெரிய சைஸ் குக்கர் வாங்கி, அதை யூஸ் பண்ணாம ஸ்டோர் ரூம்ல போட்டுப் பூட்டி வைக்கிறது (வெள்ளிக்கிழமை சாம்பிராணி தூபம் கட்டாயம் உண்டு);

  சாப்பிடுற கிரீமா, இல்ல உடம்புக்கு போடுற கிரீமான்னு தெரியாமலேயே அதையும் டப்பா, டப்பாவா வாங்கி செல்பி எடுத்துட்டு செல்ஃப்ல வைக்க வேண்டியது;  

  ஷாப்பிங்ல கிரெடிட் கார்ட் யூஸ் பண்ணினா பாயிண்ட் கிடைக்கும், அதை சேத்து வெச்சு புதுசா ஏதாவது பொருள் வாங்கலாம்னு பிளான் பண்ணி cardடை கண்ணாப் பின்னான்னு இன்ஸ்டண்ட் லாட்டரிய சுரண்டுற மாதிரி தேய்க்கிறது;

  ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம்னு எக்ஸ்பைரி முடியப்போறப் பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்து வீட்டை குடோன் ஆக்குறது;

எல்லாம் முடிஞ்சு மாசக் கடைசியில பாக்கெட் காலியானதுக்கப்புறம் தான் தெரியும்.. நம்ம வைகைப்புயல் வடிவேலு ஃபிரண்ட்ஸ் படத்துல சொல்ற மாதிரி “புடுங்குனது எல்லாமே தேவையில்லாத ஆணின்னு..”

  கொஞ்சம் கைல காசு சேந்த்(துட்டா)லே பாக்குறதெல்லாம் வாங்கற ஆட்கள் இருக்கும்  போது நம்ம அப்புசாமி அண்ணாச்சி மட்டும் என்ன தொக்கா? சிட்டி நடுவுல, மாடி மேல மாடி கட்டி மளிகை கடை வச்சுருக்காரு. சிட்டி அவுட்டர்ல்ல 5 ஏக்கர்ல காம்பவுண்ட் கட்டி  50 சென்டில் வீடு கட்டி வச்சுருக்காரு. அவரு என்னெல்லாம் வாங்குவாரு? (பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான், உனக்கு ஏண்டா வயிதெரிச்சல்?)

  யாராவது ஒருத்தர் அவர்கிட்ட போய் இந்தியாவிலேயே இல்லாத கார் ஒருத்தர் வச்சிருக்(காரு)ன்னு சொல்லிட்டா போதும், உடனே, அவரும் அதே மாதிரி ஒரு கார் வாங்கிடுவார்.

  ஏ.ஆர். ரகுமான் புதுசா ஒரு பியானோ வாங்கி இருக்காரு அந்த மாதிரி இந்த உலகத்தில் யார்கிட்டேயும் இல்லைன்னு சொன்னாக் கூடப் போதும். உடனே அதே மாதிரி ஒன்னைத் தேடிப்பிடிச்சு வாங்கி அவர் வீட்டுப்..(சாரி சொல்ல மறந்துட்டேன்… அதை வீடில்லை மாளிகை. ம்.. ஹூம்.. தப்பு தப்பு.. அரண்மனை..ம்..  அதான் கரெக்ட்..) அரண்மனைப் பக்கத்துல இதுக்குன்னே கட்டி வச்சிருக்க மியூசியத்துல(Citizen Kane படத்துல வர்ற மாதிரி) கொண்டு போய் வச்சுருவாரு.. இரிடியம் கலசம் முதல் லேட்டஸ்ட் ஆம்பர்கிரிஸ் (ஒரு கிராம் ஆம்பர்கிரிஸ் silverரை விட பத்து மடங்கு விலைன்னு பேசிக்கிறாங்க) வரை அவர்கிட்ட இல்லாத வித்தியாசமான பொருளே இல்லைங்கலாம். அட ஆமாங்க.. சொன்னா நம்புங்க.. அவர்கிட்ட வித்தியாசமான ஒரு பொருள் இல்லேன்னா அது கூகுல்ளேயே இல்லைன்னு அர்த்தம். போதுமா?

பொங்கல் அன்னைக்கு, கடை வரவு செலவு எல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டு ஓய்வா உட்கார்ந்து டி.வி. பார்க்கும் போது ஜல்லிக்கட்டு பத்தி நியூஸ் வந்துச்சு. ஒரு காளை மாடு தனது முரட்டு கொம்பால அப்படியே அலேக்கா அதை அடக்க வர்றவங்கள எல்லாரையும் தூக்கிப் போட்டு சும்மா மிதி மிதின்னு மிதிச்சுட்டு, விரட்டி விரட்டி ஓட வைச்சத பார்த்த அவருக்கு ஏதோ உற்சாகம் பொங்குச்சு.. (பொங்கல் அன்னிக்கு பொங்கல் மட்டும் தான் பொங்கணுமா என்ன?)

 உடனே யாரக்கிட்டேயும் இல்லாத மொரட்டுத்தனமா முட்டுற மாடு ஒண்ணு வேணும்னு ஒரு புரோக்கருக்கு போன் பண்ணி சொல்ல, அண்ணாச்சிக்கு மாடு வேணும்னு அந்த தகவல் பல புரோக்கர்கள்கிட்ட போய், அடுத்த நாள் நைட்டே தேடிப்புடிச்சு நல்ல முட்டுற மாட்டை அண்ணாச்சி தூங்கும் போதே கொண்டு வந்து மியூசியத்துக்கு பக்கத்துல செட் ஒண்ணு போட்டு ரெண்டு சைடும் கயிறு கட்டி மாட்டை கட்டி வெச்சுட்டாங்க. அண்ணாச்சி ஹேப்பி..

அடுத்த நாள் காலையில, ரெகுலரா அண்ணாச்சி வீட்டுக்கு பால் ஊத்துற ஊத்தப்பன் (பால்காரர்) வந்து வந்து அஞ்சு லிட்டர் பால் ஊத்திட்டு நேராப்போயி புல்வெளியில உட்க்கார்ந்து பேப்பர் படிச்சிட்டிருந்த அண்ணாச்சி கிட்ட போயி,

 கடைசியில என் பொழப்புல கை வச்சுட்டீங்களே அண்ணாச்சி! இது ஞாயமான்னு கேட்டாரு.

 அண்ணாச்சி அதிர்ச்சியாகி, “உனக்குத்தான் நான் எந்த பாக்கியும் வைக்கலையே.. மாசா மாசமா பால் பணத்தோட, பொங்கல், தீவாளி காசு வேற தர்றேனே”ன்னார்.

 அதுக்கு அந்த பால்காரர்,

 “மாட்ட பாத்துட்டு தான் வர்றேன் அண்ணாச்சி.. நான் பால்ல தண்ணி கலக்குற(what? அதான் சொன்னேனே ஊத்(தப்ப)ன்) விஷயத்தை எப்படியே தெரிஞ்சுகிட்டு, நீங்களே 10 லிட்டர் கறக்கற பால் மாட்ட வாங்கிட்டீங்கில்லை…” என்றான் அ()ப்பாவியாய்.   

  நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. அப்பதான் அண்ணாச்சிக்கு உறைச்சது..  தான் காசு கொடுத்து ஒடனே வேணும்னு வாங்கினது ஜல்லிக்கட்டில் வர்ற காளை மாடு இல்ல.. நல்லா முட்ட தெரிஞ்ச மொரட்டு பால் கொடுக்கிற பசுமாடுன்னு ..

ஓ.. அப்ப, இது நாள் வரை, இப்படித்தான் எல்லா பொருளையும் முட்டாள்தனமா வாங்கி இருக்கோமான்னு நெனச்சு, மியூஸியத்துக்குள்ள ஓடிப்போய் ஒரு ரவுண்டு சுத்தி பார்த்தாரு.. அப்ப தான் அவருக்கு ஒண்ணு புரிஞ்சது.. அங்க அவரு யாருக்கும் பயன்படமா வாங்கி குவிச்சு வெச்சு இருந்தது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்னு (வெளியில கட்டியிருக்கிற பால் கறக்கும் மாட்டை தவிர…)  

————————————————————The END———————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *