“சாயங்காலம் ஒரு 4-5 மணி நேரம்தான் வேலை. வடை, போண்டா, பஜ்ஜி, சூப்பு, ஆம்லெட், டீன்னு போட்டு சும்மா பணத்தை அள்ளுறான்ல அந்த டீ கடை ஆளு”ன்னு..  சில IT யில வேலை பாக்குறவங்க, டீக்கடைகாரரைப் பார்த்து அங்கலாய்க்கிறதும், “இவங்கெல்லாம் தான் ராஜ வாழ்க்கை வாழுறாங்க, ஆபீஸ்ல A/C என்ன? கார் என்ன? வாரம் ஆனா வீக்-என்ட் டூர் என்ன? பார்ட்டி என்ன?”ன்னு, டீ கடையில வேலை பாக்குறவங்க IT எம்ப்ளாயிஸ பார்த்து பொலம்புறதும் OMR ரோட்ல ஒரு தடவை நடந்து போனீங்கனாவே பார்க்கலாம்(இப்படி பேசுறவங்க எல்லாம் அவங்க செய்யிற வேலைய ஒரு நாள் மாத்தி பாத்தா தான் தெரியும்- எல்லா தொழில்லேயும் எவ்வளவு சிரமம் இருக்குன்னு).    

 பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்து பொறாமைப்படுறது,எதிர் வீட்டுக்காரன் வசதியா வாழ்ந்தா வயித்தெரிச்சல்படறது, கோடிக்கணக்குல சம்பாதிக்கிறான்யா அந்த நடிகன்னு சோசியல் மீடியாவுல பொங்குறது(கோடியில சம்பாதிக்கறதுக்கு முன்னாடி சாப்பாடு இல்லாம தெருக்கோடியில இருந்ததெல்லாம் பொங்குறவங்களுக்கு தெரியாது). 

  எதனால இந்த பொலம்பல்? ஒவ்வொருத்தரும் வாழ்ற சூழ்நிலை! இல்ல, வளர்ந்த சூழ்நிலை! இல்ல செய்யிற வேலை! திறமைக்கு ஏத்த சம்பளம் பத்தல.. சீக்கிரமே வேலையே செய்யாம பணக்காரன் ஆயிடனும்ங்கிற நப்பாசை. குறுக்கு வழி சம்பாத்யம், ஏமாற்றம். இந்த மாதிரி பல காரணங்கள் இருக்கலாம்..

 யோசிச்சு, யோசிச்சு அதிக சம்பளம் உள்ள வேலைக்கு குரங்கு மாதிரி தாவிக் கிட்டே இருக்கிறத விட, கொஞ்சம் நேசிச்சு பண்ணினா, பிடிச்ச வேலையில சம்பளம் அதிகம் இல்லேன்னாலும் நிச்சயமா நிம்மதி இருக்கும். பொலம்பல் சவுண்ட் கொஞ்சம் கொறைய வாய்ப்பிருக்கு..  

 கூட இருந்தவன் ரொம்ப சம்பாதிச்சா அவன் தெறமையைப் பாராட்டுலேன்னாலும் அவனுக்கு திறமை இருக்குன்னு ஒத்துக்கிட்டு உங்க வேலையைப் பார்த்தாப் போதும்.. பொதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, இல்லையா?

 நல்லா படிச்சவங்களே நடு ரோட்ல வந்து சண்டை போடுறப்ப,  பாவம்..  அன்னாடங்காய்ச்சிங்க மட்டும் இதுக்கு விதி விலக்கா என்ன?    

  வடபழனி கோவில் வாசல்ல, தெப்பக்குளம் பக்கம், பூ, பழம், தேங்கா, நெய் விளக்கு, விக்கிற தர்மாவுக்கும், பத்தடி தள்ளி அங்கேயே கிளி ஜோசியம் பாக்குற வனஜாவுக்கும் அதே போட்டி, பொறாமை.

வனஜா கல்யாணங்கட்டி கொஞ்ச நாள்ல பாழாப்போன குடியால புருஷன் போய் சேந்துட்டான்.. அவளும் புருஷன் பார்த்த தொழில ஏதோ கத்துகிட்டு தெரிஞ்சத சொல்றா.. 

 இங்க பக்கத்துல இருக்கிற மாலை விக்கற கடைகள்ல எடுபிடி வேலை பார்த்த தர்மா, முன்னேறி சொந்தமா சின்ன கடை வெச்சி பொழப்பு நடத்துறான்.. 

 இந்த ரெண்டு பேரும் கத்தி, கத்தி போடுற வாய் சண்டைக்கு பஞ்சாயத்து பண்ணி வைக்கிறது பக்கத்துலேயே போலீஸ் BEATல இருக்கிற போலீஸ் இல்ல; கோவில் வாசல்ல கொஞ்சம் தள்ளி உட்காந்து இருக்கிற பிச்சை எடுக்கிறவாங்க தான். 

 அர்ச்சனை, கோயில் உள்ளேயும் உண்டு; வெளியேயும் உண்டுங்கிறது அந்த வழியா அடிக்கடி போறவங்களுக்குத் தெரியும். வனஜாவின் கிளி கிளியோபாட்ரா கூட சில சமயங்கள்ல அவனை திட்டுதுன்னு தர்மா சண்டைக்கு போவான்.    

 ஒரு நாள் சண்டை முத்திப்போக மூத்தப்பிச்சைக்காரர் முனுசாமி பட்டி மன்ற தலைவர் போல தலையிட்டு, ரெண்டு பேரும் எலியும், பூனையும் மாதிரி ஏன் எப்ப பாரு சண்டை போடுறீங்க?

 “ஜோசியமும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது, வாய்க்கு வந்தத உளர்றா; பீலா பார்ட்டி. பொய் சொல்லியே பணம் சம்பரிக்கிறா. இதென்ன பெரிய கம்பராமாயணமா? இதெல்லாம் ஒரு பொழப்பு.. கிளி ஜோசியம் என்ன? உன்ன மாதிரி பொய் சொன்னா ..  எலி ஜோசியம், புலி ஜோசியம், பூனை ஜோசியம், யானை ஜோசியம், கை ரேகை, கால் ரேகை, எல்லாம் பார்ப்பேன்னு” வனஜாவைப் பார்த்து நம்ம தர்மா சொல்றதும் தப்பு. 

 “நான் பொய் பேசி சம்பாதிச்சா உனக்கென்ன.. எங்கேயோ எல்லாத்தையம் சீப்பா விலைக்கு வாங்கிட்டு வந்து இங்க அநியாய விலைக்கு விக்கிறதால தான் போனி ஆக மாட்டேங்குது; சரியான 420. அதான் ஜனங்க வீட்டுலேர்ந்தே தேங்காப்பழம் எல்லாம் கொண்டு வராங்க; இந்த வேலையை நான் தூங்கிக்கிட்டே கால ஆட்டிக்கிட்டே பார்ப்பேன்; முடிஞ்சா என் வேலைய ஒரு நாள்.. ஒரு நாள்.. செஞ்சு பாருன்னு” முதல்வன் ரேஞ்ச்க்கு தர்மாவ பார்த்து வனஜா கேக்கறதும் தப்பு.

 “ரெண்டு பேருமே எதிர் நீச்சல் போட்டுத்தான் வாழ்க்கைய நடத்துறீங்க. ஆனா, எதிலேயும் கொஞ்சம் நிதானம் தேவை.. இல்லேன்னா கடைசிக்காலம் என்னோடது மாதிரி ஆயிடக்கூடாது..” 

என உருக்கமாகப் பேச,

“ஒண்ணு செய்யலாம்! யாரும் யாரைப் பார்த்தும் பொறாமைப் பட வேணாம். யார் வேலை ஈசின்னு போட்டி வெச்சிக்கலாம்.. தர்மா! ஒரு நாளு நீ ஜோசியம் பாரு;  வனஜா தேங்கா பழம் எல்லாம் விக்கட்டும்.. “

என ஒரு சவாலான தீர்ப்பு சொல்ல, இடம், நாள் குறிக்கப்பட்டது. 

லொகேஷன் ஷிப்ட்.. 

இடம்: பெசன்ட் நகர் பீச்-அஷ்டலக்ஷ்மி கோவில்

கிழமை: ஞாயிறு

ஆர்டிஸ்ட்: கிளி,கை ரேகை ஜோசியராக தர்மா; பூ, பழம், தேங்காய் விற்கும் வனஜா, கிளி கிளியோபாட்ரா, நடுவர்களாக மூத்தப்பிச்சைக்காரர் முனுசாமி & கோ. 

அனைவரும் அங்கு ஏற்கனவே இருந்த பிச்சைக்காரர்களிடம் தங்களின் வருகையைப் பதிவு செய்ய, வந்தவர்கள் தங்களுடன் போட்டிக்கு பிச்சை எடுக்க வரவில்லை என்பது அறிந்து அங்கு நடைபெறும் தர்மா-வனஜா யுத்தத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்து பார்வையாளர்களாக இருந்து உற்சாகப்படுத்துவதாக கூறினர். 

10:00 AM: கோவிலுக்கு வந்த வெளியூர்க்கார ஆள் ஜோசியம் பார்க்க வர,வழக்கமான ஃபார்மாலிட்டி, 

ஜோசியரே! என் பையன் பேர்ல ஜோசியம் பாருங்க. 

கிளி கிளியோபாட்ரா கதவை திறந்ததும், டபக்கென வெளியே வந்து சொன்ன பேருக்கு லபக்கென ஒரு சீட்டை எடுத்துப்போட்டு விட்டு மீண்டும் தனது சிறைக்குள் செல்ல, தர்மா சீட்டை ஒருமுறை திறந்து பார்க்க அதில் கம்ப்யூட்டர் விநாயகர் இருக்க,

ம்ம்.. பையன் விடிய விடிய தூங்கமா மொபைல்ல கேம் விளையாடடுறான்.. அதானே பிரச்சனை.. 

ஆஹா. நேர்ல பார்த்த மாதிரி புட்டு புட்டு வெச்சுட்டீங்களே.. 

“ராத்திரி மொபைல புடுங்கிட்டு, கையில புத்தகத்தை கொடுங்க! தூங்கிருவான்னு” அட்வைஸ் கொடுத்து 50 ரூபாய் அவரிடம் பிடுங்கினான்.  

முனுசாமி & கோ நடுவர்கள் மார்க் போட்டனர்.பார்வையாளர்கள் கை தட்டி கரகோஷங்களை எழுப்பினர்.

வனஜாவுக்கு கொஞ்சம் நெய் விளக்கு, கற்பூரம் மட்டும் போனியாகி இருந்தது.

ஒரிஜினல் நெய்யா? மணல் மணலா இல்லையே? என்று விளக்கு வாங்க வந்த பெண் ஒருத்தி விளக்கம் கேட்க கடுப்பான வனஜா, “தோ எதிர்ல பீச்ல நெறைய மணல் இருக்கு.. வேணுக்கிறதை எடுத்து போட்டுக்க” எனப் பதிலுக்கு வெறுப்பேற்ற, இஸ்ரேல்-பாலஸ்தீனம் போல போர் மேகங்கள் வந்து சூழ்வது கண்டு நடுவர்கள் ஐநா சபை போல் வந்து இருவரையும் சாந்த(தி)ப்படுத்தினார்.  

11.30 AM: கோவில் நடை சார்த்தும் நேரம்; பிரகாசமாய் பட்டை போட்டு பக்தியுடன் ஒரு ஆள் ஜோசியம் கேட்க வந்தான். 

கிளி சோசியம் வேணாய்யா.. ரேகை பார்த்து சொல்லு! சிபிஐ ரேஞ்ச்க்கு கண்ணாடி வைத்து பார்த்தும் ஒரு ரேகையும் காணோம்.. நம் நாட்டில் காணாமல் போன ஆறுகள் போல தெரிந்த சின்ன கீறல்களை வைத்தும், அவன் போட்டுருந்த மடிப்பு கலையாத வெள்ளை சட்டையையும், பட்டையையும் பார்த்தும் ஒரு கதை விட்டான். உங்க ராசிக்கு சுக்கிர மேட்டில இருந்து ரேகை ஆறா ஓடுது.. அப்படீன்னா காசும் ஆறா ஓடும்..வந்தவன் பாக்கெட்டில் ஃபோன் அலற,  சரி நான் வர்றேன்.. ஜோசியம் பாத்ததுக்கு காசு?எவ்வளவு?100 ரூபா

“ம்ம் . இந்தா” என வந்தவன் மீண்டும் கையை நீட்டி “அதான் ஆறா ஒடுதில்ல.. வேணுங்கிறதை எடுத்துக்க!” என கூறி விட்டு செல்ல,அப்போது தான் தெரிந்தது வந்த ஆள் மணல் கொள்ளையில் இப்போது சம்பாதிக்க முடியாமல் போன பிரபல அரசியல்வாதியின் டிரைவர் என்றும்; அந்த அரசியல்வா(வியா)தி கோவிலுக்கு குடும்பத்தோடு வந்து இருக்கிறான் என்றும், அந்த 

டிரைவர் சாமி கும்பிட வந்த gapல் இங்கு கிடா வெட்ட வந்துள்ளான் என்றும்.எரிச்சலில் தர்மா இருக்கும் அதே வேளையில்,தேங்கா இளசா? இல்ல முத்தலா? என ஒருத்தன் வனஜாவை நெருங்கி சீண்ட, 11 கமாண்டர்ஸ் போல நடுவர் குழுவும் தர்மாவும் அவனை சுற்றி வர, வீர வணக்கம் வைத்து விட்டு தலை தெறிக்க ஓடினான்.  

12:30 PM: நடுவர்கள் 

பிஸ்கட்டை வனஜாவுக்கு கொடுத்து விட்டு தர்மாவுக்கும் கொடுக்க சொல்ல

வனஜா: யோ.. இந்தா பிஸ்கட்! 

தர்மா: இதெல்லாம் நாய் தான் சாப்டும்.. 

வனஜா: அதான் உனக்கு கொடுக்க சொன்னாங்க! 

1:00 PM: யாரோ ஒரு புண்ணியவான் மீந்து போன கல்யாண மண்டப சாப்பாட்டை கோவில் வாசலில் கொடுக்க தர்மா, வனஜா, நடுவர்கள் எல்லோருக்கும் சாப்பாடு கிடைத்தது.  4:00 PM: யாரும் வரல. ஒண்ணும் நடக்கல. 4:30 PM: வனஜாவுக்கு கொஞ்சம் பணம் தேறியது தேங்காய் பூ பழம் விற்றதில். நடுவர்களும் கொஞ்சம் நடு நடுவே சில்லறைப் பார்த்தனர். 

முனுசாமி & கோ நடுவர்கள் மார்க் போட்டதில் இருவரும் ஓரளவு ஸ்கோர் செய்திருந்தனர்.4:49 PM: அதிக ஸ்கோர் எடுக்க ஆசைப்பட்டு, “ஜோசியம் பாக்கலையா, ஜோசியம்” என தர்மா கூவ, ஒரு குடிமகன் அவனுக்கு முன் தோன்றினான். எனக்கு ஒரு பிரச்சனை?என்ன பிரச்சனை?ஒருத்தனைப் பார்த்தா ஓங்கி அறையனும் போல தோணுது?அறைய வேண்டியதுதானே! இங்க எதுக்கு வந்த?அது நீதாண்டா! என கூறி விட்டு, கன்னத்தில் ஒரு அப்பு விட்டான்.. காலையில் பயந்து ஓடினவனின் நண்பன் போல.. அவனை எல்லோரும் சேர்ந்து கும்மினர். 6:00 PM: தர்மா, வனஜா மற்றும் முனுசாமி&கோ ஒரு முடிவுக்கு வந்தனர். அனைவரும் பீச்சில் வட்டமாக அமர்ந்தனர். 

எங்க அனுபவத்துல சொல்றோம். எதிரும் புதிருமா இருக்கிற நீங்க ரெண்டு பேரும் ஏன் வாழ்க்கையில ஒண்ணு சேரக்கூடாது? இயற்கையோட விதி அதான். “OPPOSITE POLES ATTRACTS” என்று எப்போதோ படித்ததை முனுசாமி கூற, ஏதோ ஒரு சமயத்தில் ஏதோ ஒரு மூலை(ளை)யில் தர்மா வனஜா இருவருக்கும் தோன்றிய லைட் இப்போது பிரகாசமாக எரிந்தது அஷ்டலக்ஷ்மி கோவில் கோபுர விளக்கு போல. கிளியோபாட்ரா  கூட தர்மாவின் தோளில் அமர்ந்து கொண்டது.

 ———————-முற்றும்—————————-

2 thoughts on “எதிரும் புதிரும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *