STAR திரை விமர்சனம்.
லிஃப்ட், டாடா படங்களுக்குப்பின் கவின் நடித்த மூன்றாவது படம். ஓரிரண்டு படங்களிலேயே தனது பாதை எதுவென்று தெள்ளந்தெளிவாக உணர்த்தியதை கவின் மேலும் இதன் மூலம் உறுதிப்படுத்தி விட்டார். பெரும்பாலும் நடிகர்கள் என்பவர்கள் இயக்குனரின் எண்ண வார்ப்புகள். ஆனால், வெற்றி பெற்ற நடிகர்கள் தனக்கென ஒரு பாணியை தேர்ந்து எடுத்து ஜொலிக்க ஆரம்பித்து விடுவார்கள். கவின் தேர்ந்தெடுத்த பாதை என்பது நடிப்பு, நடிப்பு மற்றும் நடிப்பு மட்டுமே. இயக்குனர்களுக்கு இவரை போன்ற நடிகர்கள் கிடைத்தால் அவர்களும் நல்ல இயக்குனராக மாறிவிடுவார்கள்.
சரி. கதைக்கு வருவோம். சினிமா என்ற கனவுத்தொழிற்சாலையில் சேர விழையும் எண்ணற்ற கோடி நெஞ்சங்களின் நிஜ வாழ்வின் போராட்டங்கள் தான் கதைக்களம். கவின் விளையாட அமர்க்களமான களம். இதே கனவைத்தொலைத்து, தன் மகன் மூலம் நிறைவேற்றி பார்க்க முயலும் பாசமிகு தந்தையாக லால். எதிர்க்கும் அன்னை, அரவணைக்கும் அக்கா என்று குடும்பத்தோடு மட்டுமின்றி பள்ளிப்பருவம் தொடங்கி கடைசி வரை துணை நிற்கும் நண்பன் என்று பாத்திரப்படைப்பினில் முதல் வெற்றி கண்டு விட்டார் இயக்குனர் இளன். தந்தை, தாய் இருவரின் விருப்பங்களில், கடைசியில் தாயின் விருப்பம் வெற்றி பெற, சினிமா முயற்சியை விடுத்து “இன்ஜினீயரிங்” கல்லூரி வாழ்க்கையில் தன்னை திணித்து கொள்கிறார் கவின். அங்கு அவரின் காதல், மோதல், வன்மம் என்று திசை மாறி அவரது வாழ்க்கை பயணிக்கிறது.
கடைசியில் அவர் தனது லட்சியத்தை அடைந்தாரா என்பது தான் படம். கச்சிதமான வசனங்கள், கூர்மையான பட்டை தீட்டிய வைரம் போல பல இடங்களில் இயக்குனரின் வெற்றி. உதாரணம்,
கல்லூரி ” கேம்பஸ் இன்டர்வியூ”வில் கவின் பரிமாறிக்கொள்ளும் வசனங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக வெளியில் நடக்கும் உரையாடல்கள். பிடித்த வேலையை விட்டு விட்டு, வாழ்க்கை வாழ கிடைத்த வேலையில் தொற்றிக்கொண்டு காலம் முழுதும் ஒரு மகா நடிகனாக வாழ்க்கையை நகர்த்தும் நபர்கள் என்றாவது சந்தித்து கொண்டால், நாம் விட்டதை போல மற்றவர் தோற்றுவிட கூடாது என்றெண்ணி தன்னால் இயன்றதை கொடுத்து உதவி உயர்த்த எண்ணும் பாங்கு கண்ணீரை வரவழைக்கின்றது. நிறைய இடங்களில் இயக்குனர் இது போன்ற பாத்திரங்களை காட்டி நெகிழ வைக்கிறார்.
“கருப்பா இருக்கறவன் எல்லாம் வடிவேலாய்டமுடியாது” என்று உணர்ந்து பேசும் குல்பி ஐஸ் விற்பவர்…” ஒரு நடிகன் தன் திறைமை வாய்ந்த நடிப்பின் மூலம் பாரதியா நடிச்சா, பாரதிக்கு மீசை இருப்பதை கூட மறக்க வைக்க முடியும்” என்று தன் மகனிடம் சொல்லும் தந்தை “லால்”ஆகட்டும், வாழ்வை வெறுத்து போய் இருக்கும் கவினிடம், ” உனக்காக ஒரு அப்பா, அம்மா, அக்கா எல்லாரும் இருக்காங்க .. ஏன் நான் கூட இருக்கேன் மச்சான்…” என்று கலங்கி கவினை நம்பிக்கை ஊட்டி அழைத்து செல்லும் நண்பன் ஆகட்டும், ” எனக்கு உன்கிட்ட பிடிச்சது என்ன தெரியுமா? நான் உன்ன வேணாம்னு ரிஜெக்ட் பண்ணாலும், நீ உன்ன ரிஜெக்ட் பண்ணல” என்று மீண்டும் சேர்க்கும் “கோச்” ஆகட்டும்…அவரிடம் முதலில் நடித்து “ரிஜெக்ட்” ஆன வசனத்தை “க்ளைமேக்ஸ்” காட்சியில் கவினை வைத்து காண்போரை கண்ணீரின் நனைய வைக்கும் உணர்சிமயத்தில் இயக்குனர் இளன் அதகளப்படுத்தி விட்டார். கவினின் விஸ்வரூபத்தை வளர்ந்து வரும் தலைமுறைக்கு இயக்குனர் இளன் அடையாளம் காட்டி விட்டார்.
இப்படி ஒரு ஆரோக்கியமான ” சினிமா” என்ற திரைமொழியை சுத்தமாக சத்தமாக பேசியதற்கும் அவருக்கு வாழ்த்துக்கள். எங்கே ‘நடிப்பு” என்ற ஒன்றே மறந்து போய், வெறும் பணத்திற்காக விலை போய் சினிமா தரம் நலிந்து விடாமல் பார்த்து கொண்டதற்கு இயக்குனர் இளனுக்கு நன்றி. நாயகிகளாக வரும் பிரீத்தி முகுந்தன், அதிதி போன்கர் இருவரும் சரியான தேர்வு…இருவரும் மிரட்டி எடுக்கிறார்கள். அழகு பதுமையாக பிரீத்தி தனது நடன அனுபவ பின்னணி திறமையால் இலகுவாக நடித்து விட்டு கடந்து போகிறார். அதிதி ஒரு படி மேலே சென்று நடிப்பில் அசத்துகிறார்.
“ஸ்டுடியோ”மாமாவாக கவினை “ஹீரோ” என்று அழைத்து நெகிழும் பாத்திரம் என அனைவரும் இயக்குனரின் வெற்றி வார்ப்புகள்.
மும்பையில் கவின் பழகி கலக்கும் மனிதர்கள் அனைவரும் நெகிழ்வின் வேர்கள். மனிதத்தின் எச்சங்கள். சாலையோரங்களில் சிதறிக்கிடப்பவை. பூவுலகத்தை நேர்மறையாகவும் காட்டியது மிக்க ஆறுதல். தண்ணீரைப்போல எந்தப்பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவில் அடைவது போல மிக எளிமையாக அனைத்து பாத்திரங்களிலும் ஒன்றி கலந்து விடுகிறார் கவின். வெகுசில நடிகர்களுக்கு உண்டான திறமை அது. வெகு எளிதாக வலியின் உணர்வை கடத்துகிறார்.
யுவனின் இசை இளமையையும், அனுபவத்தையும் இணைக்கும் பாலமாக அமைகிறது. “க்ளைமாக்ஸ்” காட்சி பின்னணி இசை அவரது முதிர்ச்சியை காட்டுகிறது.
கமல், விக்ரம், ஆர்யா, தனுஷ் வரிசையில் மூன்றே படங்கள் மூலம் ஒரு தேர்ந்த நடிகனாக இப்போது கவின் இணைந்திருப்பது அவருக்கு கிடைத்த மாபெரும் சாதனை.
“ஸ்டார்” கவினின் மேடை.
– கிருஷ்ணன் இரவிஷங்கர்