பிரேமலு: மலையாள திரைப்பட விமர்சனம்
– கிருஷ்ணன் இரவிஷங்கர்
இயக்குனர் A D கிரிஷின்ன் 3 வது படம். தண்ணீர் மாத்தன் தினங்கள், சூப்பர் சரண்யா போன்ற வெற்றி படங்கள் வரிசையில் 2024 காதலர் தினம் முன்பு வெளிவந்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதுபோல நூறு படங்கள் வந்திருந்தாலும், 90களில் திரைக்கு போனால் ஒரு பாப்கார்ன் எடுத்து கொண்டு தெளிவாக இதமாக நகைச்சுவை கலந்த இளமையான படத்திற்கு போவது போல, ஒரு சுகமான, இலகுவான படத்தை அளித்துள்ளார் இயக்குனர். முதல் வெற்றி அவருக்கு. நீரோடை போல தெளிந்த திரைக்கதை, வசனம், காட்சியமைப்பு என வெண்ணெய் போல வழுக்கி கொண்டு படம் செல்கிறது.
நாயகன் நஸ்லேன் நண்பன் “அமல் டேவிஸ்” ஆக வரும் சங்கீத் அமர்க்களப்படுத்துகிறார். ஏங்க வைக்கும் நண்பர்கள் கொண்டாடும் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம். வீண் “கெத்து” காட்டி வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளும் தலைமுறையில் இருந்து மாறுபட்டு, இயல்பான வாழ்வியலில் நம்பிக்கை வைத்து நஸ்லென் சங்கீத் மூலமாக பெரும் வெற்றி அளித்துள்ளார் இயக்குனர் கிரிஷ்.
ஒவ்வொரு பாத்திரமும் நமது வாழ்வின் பாத்திரமாக பிரதிபலிப்பது படத்தோடு நம்மை கட்டி போட வைக்கிறது. இடம் மாறும் கதைக்களம் எனினும், இதம் மாறாமல் கொடுத்து இருக்கிறார். விடுதியில் படிக்கும் நண்பன் சங்கீத்திடம், தனது காதல் நிராகரிப்பு குறித்து புலம்பும் இடமாகட்டும், ரயிலில் உறங்கும் நாயகியிடம், தனது காதலை வெளிப்படுத்தும் இடமாகட்டும், அவரை விட்டு விலகி தனது படிப்புக்காக வெளிநாடு செல்ல பிராயத்தனமாகட்டும்… அனைத்திலும் பிரமாதமாக சோபிக்கிறார் நஸ்லேன்.
ஓராயிரம் திறமைகள் தன்னுள் இருந்தாலும், ஒரு சிலது மட்டுமே இந்த படத்துக்கு போதும் என்று “ரீனு”வாக வரும் நாயகி “மமைதா பைஜு’வின் நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம். மொத்த பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். கொஞ்சம் நஸ்ரியாவின் சாயல். கொஞ்சம் கொஞ்சமாக நாஸ்லேனிடம் மனம் திரும்புவதாகட்டும், எந்த பதிலும் அளிக்காமல் விலகி தூர இருக்கும் நஸ்லெனின் நினைவில், இரவில் சமையலறையில் பால் பாத்திரத்தில் ஒரு சிறிய கரண்டியை கொண்டு கலக்கி கொண்டே குலுங்கி அழுவதாகட்டும், கடைசியில் விமான நிலையத்துக்கு நஸ்லெனுடன் செல்ல காரில் ஏறிக்கொண்டு, நீ போக வேணாம்…உன்னால அங்க இருக்க முடியாது…நீ இங்கேயே இரு… நீ என்னை பாத்துக்கறது எனக்கு பிடிக்கும். இங்கேயே இரு என்று சமாதானம் செய்து கெஞ்சுவதாகட்டும்….தனி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்.
போட்டி காதலனாக வரும் ஆதியாக “ஷ்யாம்”. படத்திற்கு இன்னொரு பலம். ஒரு சண்டை காட்சியோ, ஆபாச வசனங்களோ இன்றி முழு நீள நகைச்சுவை கலந்த காதல் கதையாக அளித்த இயக்குனர் A D கிரிஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வெறும் 3 கோடியில் படம் எடுத்து 63 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் இந்த போக்கு, நல்ல படங்களுக்கு மக்கள் குடுக்கும் மரியாதை மட்டுமே என தெரிகிறது.
மீண்டும் மீண்டும் இது போல நல்ல படங்களை அளிக்க நினைத்து, அதில் வெற்றியளித்து, மக்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் இது போன்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அதில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருக்கும் நாம் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்.
பிரேமலு…இது காதல் காலம். வசந்த காலம்.