அக்டோபர் 2023 இல் வெளிவந்து, இன்று வரை ஓயாமல் பேசப்படும் படம். மனோஜ் குமார் ஷர்மா IPS, ஷ்ரத்தா ஜோஷி IRS தம்பதிகளின் உண்மை கதை.
ஒரு கனவின் ஒளிக்கீற்றில் நடந்து சென்று தன் லட்சியத்தை பிடிக்கும் நாயகனாக விக்ராந்த் மாசே. அப்துல் கலாமை அவ்வப்போது சுட்டிக்காட்டும் போது நமக்குள் ஒரு கர்வம் பிறக்கிறது. சிரித்து கொண்டே அவர் தொடுக்கும் முயற்சிகள், படும் கஷ்டங்கள், ஏமாற்றங்கள், கோபங்கள், நேர்மை நெறிவழி பேணுதல் என மிரட்டி எடுக்கிறார் விக்ராந்த். அவரின் குடும்பம் அனைத்தும் நெஞ்சில் தைக்கிறது. விது வினோத் சோப்ராவின் எழுத்தும் பாத்திர படைப்பும் நிகரற்றவை. தான் நினைப்பதை திரையில் தீட்டும் ஒப்பற்ற நிபுணன். அனைத்து பாத்திரங்களையும் வாழ விட்டு இருக்கிறார். அதனால் இம்மியளவும் தொய்வில்லாமல் படம் நகர்கிறது. கல்வியின் அவசியம், முயற்சியின் அர்த்தம் என மாண்புகளை தூக்கி பிடித்து அனைவர் மனதிலும் நம்பிக்கை வளர்க்கிறார். சீருடை பெருமை, அதன் நெறிக்காக போராடும்போது கலங்கவைக்கிறார். நாயகியாக வரும் மேதா சங்கரின் குரல் மற்றும் முக பாவம் இயற்கையாக அவருக்கு துணை போகிறது. அம்ரிதா ராவை நினைவூட்டுகிறார். “நீ என்கூட இருந்தா இந்த உலகத்தையே புரட்டி போட்டுடுவேன்” என்று விக்ராந்த் சொல்லும்போது முதலில் மறுதலித்தும், சில காலத்திற்குப்பின், தோற்று போன நண்பன், விக்ராந்த்திடம், இவ உன்கூட இல்லாம இருந்திருந்தா நீ கண்டிப்பா பாஸ் பண்ணிருந்திருப்ப.. இவளுங்க எல்லாம் இப்டித்தான்… தோத்துட்டா விட்டுட்டு ஓடிருவாளுங்க…என அவரை வைத்துக்கொண்டே சொல்லும்போது, விக்ராந்தின் கையை பிடித்து கொண்டு கண் கலங்கி விட்டு நகர்வதும்…உடன் தன்னை துரத்தி வரும் விக்ராந்திடம் கண்ணீர் வழிய, ” நான் உன்கூட இருந்தா இந்த உலகத்தையே புரட்டி போடுவென்னு முன்ன சொன்னல்ல…மனோஜ்.. ஐ லவ் யூ…போ…போயி உலகத்தை புரட்டி போடு” என அழுது கொண்டே தன் காதலை சொல்லி கதறி விக்ராந்த்திற்கு தோள் கொடுக்கும்போது நடிப்பின் உச்சம் தொடுகிறார். தன் கனவை எட்டிய பிறகும் விக்ராந்தின் இறுதி முயற்சியில் அவர் தடுமாறும் போது அவரின் கடிதம்…அதில், ” நீ என்னவா இருந்தாலும், என் கடைசி காலம் வரை உன்கூட இருப்பேன். நீ என்ன கல்யாணம் பண்ணிப்பியா?” என கேட்டு கடிதம் மூலம் மீண்டும் விக்ராந்தின் நம்பிக்கைக்கு அடித்தளம் அமைத்து வெற்றி பெற செய்யும் பாங்கில் மிளிர்கிறார். நேர்காணலில் அம்பேத்கரின் வாசகங்களை நினைவூட்டுவது மெய் சிலிர்க்க வைக்கிறது. ப டம் பார்க்கும் அனைத்து இளம் தலைமுறையினருக்கு நேர்மறையான ஒரு செய்தியை கடத்தி சென்று தன் நாடு, எதிர்காலம் என நீண்ட கனவை உரக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் விது வினோத் சோப்ரா. அவரின் இந்த செயலுக்கு நமது வணக்கங்கள்.
12th Fail… ஒரு நேர்மையின் வெற்றி.
– கிருஷ்ணன் இரவிஷங்கர்