மார்கழி திங்களில் ஒரு கண்ணகியின் வாரிசு
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்றால் கம்பனின் வாரிசு காவியங்கள் இயற்ற மாட்டாரா என்ன?
இயக்குநர் இமயத்தின் வாரிசு இமயத்தின் அடிவாரத்தில் ஆழமாக கால் தடம் பதித்து மலையேற முயற்சித்து இருக்கிறார்.
மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குநராகி சினிமா இலக்கணங்களை தான் முறையாக கற்று இருப்பதை தன் முதல் பட இயக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார் மனோஜ் பாரதிராஜா.
உண்மையான காதலை ஆவணங்கள் இல்லாமல் ஆணவத்தால் வீழ்த்தும் அழிச்சாட்டியத்தை, நவீன சமூகம் அன்றும், இன்றும் ஒரே மாதிரி கடந்து போவதை கண்டு கொதித்தெழும் கவிதா மூலம், சிறு சீர்திருத்தக் கவிதை எழுத முயன்று, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் மனோஜ்.
வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் மூலம் இயக்குநர் சுசீந்திரன், ஒரு நல்ல கதையையும் கொடுத்து சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஒரு உதாரணப் படத்தையும் கொடுத்திருக்கிறார்.
அறிமுகமாக இருந்தாலும் படத்தில் நாயகன், நாயகியாக வரும் ஷ்யாமும், ரக்ஷனாவும் நடிப்பில் நிஜ காதலர்களை பிரதி எடுத்துள்ளனர்.
இயக்குநர் சுசீந்திரனும், இயக்குநர் இமயமும் தங்கள் அக்மார்க் நடிப்பு மூலம் காட்சிகளுக்கு விறுவிறுப்பையும், பதட்டத்தையும் கூட்டி இருக்கின்றனர்.
பின்னணி இசையிலும், பாடல்களிலும் இசைஞானியின் முத்திரை ஆங்காங்கே வண்ணக்கோலமாக இருக்கிறது இந்த மார்கழி திங்களில்.
எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறேன் என்று, உணர்வுகளை தூண்டி விடாமல், ரத்தத்தை திரையில் தெளிக்காமல், அளவான அறுசுவை உணவு போல பிற்போக்கு சிந்தனைகளை கூட அதிகமான காரத்தோடு காட்டாமல், கோபமான வசனங்களில் கூட தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல், வசனம் எழுதி இருப்பது திரை வசன நாகரிகம்.
கதாநாயகி உடன் நடிக்கும் துணை கதாபாத்திரங்கள் மூலம் கதையின் போக்கில் திருப்பங்களை தந்து, கடைசியில் உண்மையான வன்மம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று கண்டு ஆத்திரமும், அழுகையும் கொள்ளும் நாயகி தனி ஆளாக இறுதி தீர்ப்பு எழுதுவது கண்ணகியின் வாரிசு போல் இருக்கிறது.
இயக்குநர் மனோஜ் அவர்களுக்கும், திரைப்பட குழுவில் உள்ள அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், திரைமொழி சினிமா மாத இதழ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.