என்னப்பா சேகர்? ஆர்டிகிள் ரெடியா?
என்ற எடிட்டரின் கேள்விக்கு,
“தோ .. முடியப்போகுது சார்! ஒரு ஃபைனல் டச் கொடுத்துகிட்டுருக்கேன்.. எப்படியோ டிக்கெட் கூட ரிசர்வ் பண்ணிட்டேன் .. நைட் சென்னை எக்ஸ்பிரஸ்ல வந்துருவேன்..”
என்று இதுவரை எழுதாத கட்டுரைக்கு முடிவுரை கூறி, கேட்காத கேள்விக்கு பதில் கூற,
“நீ எக்ஸ்பிரஸ்ல வர்றது இருக்கட்டும். மொதல்ல ஆர்டிகிள முடிச்சி இ-மெயில்ல அனுப்பு”
என்று முற்றுப்புள்ளி வைத்தார் எடிட்டர்.
ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்குப் போனவனை கொரோனா ஊற வைத்து துவைத்தது. மெல்ல குணமாகி, மீண்டு(ம்) சென்னைக்கு ஆபீஸுக்கு வருகிறேன் என்று மூன்று நாட்களுக்கு முன்பு சொன்னவுடனே எந்த தேதியில வேணுமானாலும் வா!! ஆனா வர்றதுக்கு முன்னாடி- தேதி இல்லேன்னா காலண்டர்- இதை மையமா வெச்சு ஒரு ஆர்டிகிள் எழுதி இன்னும் ரெண்டு நாள்ல அனுப்பிச்சிடு என்ற எடிட்டரின் ஃபாலோ-அப் தான் மேற்கண்ட உரையாடல்.
கல்யாண தேதி, டெலிவரி தேதி, காதுக்குத்து தேதி, எக்ஸாம் தேதி, ரிசல்ட் தேதி, இஎம்ஐ கடைசி தேதி, ஈபி பில் தேதி, இன்சூரன்ஸ் டியூ தேதி, வலிமை பட ரிலீஸ் தேதி, நயன்தாரா கல்யாண தேதி என ஏதோதோ பேப்பரில் கிறுக்கிப்பார்த்ததில் சேகருக்கு நடு மண்டையில் நாலு முடி கொட்டியது தான் மிச்சம்..
ஏதாவது பன்ச் லைனோடு ஆரம்பிக்கலாம் என்று யோசித்து,
மனுஷனோ, குரங்கோ, கழுதையோ, குதிரையோ பொறக்கும் போது எல்லாருக்கும் ஒரு கடைசி தேதி போட்டுத்தான் கடவுள் நம்மள பூமிக்கே அனுப்புறான்.. யாருக்கு எந்த தேதி கடைசித்தேதின்னு யாருக்குமே தெரியாது. ஜகமே தந்திரம்!!.. என்று எழுதிவிட்டு, பிடிக்காமல் STRIKE OUT செய்தான்.
மனுஷனோ, குரங்கோ, கழுதையோ, குதிரையோ பொறக்கும் போது எல்லாருக்கும் ஒரு கடைசி தேதி போட்டுத்தான் கடவுள் நம்மள பூமிக்கே அனுப்புறான்.. யாருக்கு எந்த தேதி கடைசி தேதின்னு யாருக்கும் தெரியாது. ஜகமே தந்திரம்..
காலண்டரை எடுத்து தேதியை கிழித்துகொண்டே வந்தான். கால் மணி நேரத்தில் நாலு மாத தேதியை கிழித்திருந்தானே தவிர, கட்டுரைக்காக வேறு ஒன்றும் எழுதி கிழிக்கவில்லை.
மீண்டும் கிழிக்(கையில்), செப்டெம்பர் 5. ஆசிரியர் தினம் கையோடு வர, எங்கோ “கிளிக்” ஆக, தன் வரலாற்று ஆசிரியர் வணங்காமுடிக்கு ஃபோன் போட்டான். அவர் சொன்னதின் சுருக்கம்.
மாயன் காலண்டர்(தேதி முடிச்சி போச்சாமே!!), சோலார்(ம். சோழர்!!) காலண்டர், லூனார் காலண்டர், ஜூலியன் காலண்டர், போப் கிரிகோரி காலண்டர், இதப்பத்தி எல்லாம் பழைய பஞ்சாங்கம் மாதிரி எழுத வேணாம். நம்ம வாழ்ற வாழ்க்கை முறையை பின்பற்றித்தான் எல்லா காலண்டரும் வடிவமைக்கப்பட்டது, அதுல குறிப்பா சொல்லணும்னா விவசாயம், வானிலை, கோள்களின் சுழற்சி இதை மையமா வச்சு தான் எல்லா காலண்டரும் இருக்கு. மனுசனை இயற்கையோட இணைக்கிற விழாத் தேதிக்கள் பத்தி எழுது.. உதாரணத்துக்கு நம்ம ஊரு பொங்கல் விழா, சூரிய வழிபாடு பத்தி சொல்லுது. இதே மாதிரி ஜப்பான்ல கூட சுகுமி(TSUKUMI)ன்னு ஒரு விழா.. நிலாவொளித்திருவிழா பத்தி சொல்லுது. அது மாதிரி ஒவ்வொரு நாட்டுலேயும், ஒவ்வொரு பண்பாட்டுலேயும், பல விழாக்கள் இருக்கு. அதைப் பத்தி எழுது.. ஆக தேதிகள் சொல்லுற சேதிகள் தான் முக்கியம்.
என்ற வணங்காமுடியின் வழிகாட்டலோடு “தேதி சொல்லும் சேதி” என டைட்டில் வைத்து விட்டு கூகிளில் தேடிய சில விஷயங்களோடு இணைத்து ஒரு கட்டுரை எழுதினான்.
SIDE BAR, அல்லது பாக்ஸ் நியூஸாக என்ன போடுவது என யோசித்து, பிரபல நடிகர்களின் பிறந்த தேதியை முதலில் போட்டு விட்டு(COMMERCIAL BOSS!! கண்டுக்காதீங்க), பிறகு, அன்னை தெரசா, ஆப்ரகாம் லிங்கன், காந்தி, காமராஜர் என்று தலைவர்களின் பெயரையும் பட்டியலிட்டான். உலகம் முழுக்க கொண்டாடப்படும் பூமி சம்பந்தமான, இயற்கை சம்பந்தமான தேதிகளையும் பட்டியல் போட்டு பாக்ஸ் நியூஸில் சேர்த்து ஃபைனல் டச் கொடுத்தான்.
டைப் செய்து இ-மெயில் அனுப்பி விட்டு மணியை பார்த்த போது தான் 06748 சென்னை எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து புறப்பட இன்னும் 1.5 மணி நேரமே இருப்பது தெரிந்து, 25 கிமீ தூரம் உள்ள தனது சொந்த ஊரில் இருந்து தெறித்து ஓடினான் திருச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு.
ஸ்டேஷன் காலியாக இருக்க, என்குயரி கவுண்டரில் டிக்கெட் காண்பித்து எந்த பிளாட்பார்ம் என கேட்டான். 4 வது பிளாட்பார்ம்.. ஆனா நீங்க புக் பண்ணின ட்ரைன் போய் 23 மணி நேரம் 55 நிமிஷம் ஆயிடுச்சு. நாளைக்கு அதாவது இன்னும் 5 நிமிஷம் கழிச்சு 00:00 க்கு அப்புறமா 00.05 வரப்போற டிரைனுக்கு நீங்க புதுசா ஓபன் டிக்கெட் எடுத்து தான் போகணும்.. இல்ல டிரைன்ல sitting சீட் வேணாம்னா பஸ் புடிச்சி தான் நீங்க போகணும் ..
என்று அந்த என்குயரி ஆபிசர் விளக்கம் சொல்ல அவனுக்கு தேதி எல்லாம் மறந்து போனது.
யோசித்து, யோசித்து அவன் நிற்கையில்,
இதுவே நீங்க போன வருஷம் பிப்ரவரி 29 அன்னைக்கு டேட் மிஸ் பண்ணியிருந்தா, நாலு வருஷம் கழிச்சுதான் அந்த தேதிய பாக்க முடியும்!
ஏன்னு சொல்லுங்க? ஏன்னா போன வருஷம் லீஃப் இயர் என்று அவனுக்கே ஃபைனல் டச் கொடுத்தார் என்குயரி ஆபிசர்.
அதை எதையும் காதில் வாங்காமலேயே, ஸ்டேஷனுக்குள் 06748 நுழைய சேகர் மட்டும் வெளிநடப்பு செய்தான் பஸ் ஸ்டண்ட் நோக்கி.
————————————————முற்றும்——————————————-